Monday, January 09, 2006

 

ஒரு மாலை இளவெயில் நேரம்

அந்தப் பாடலில் ஹாயாக சூர்யா அஸின் இன்னபிற நடன நடிகர்கள் நடந்து வருவது போல் வெகு ஜாலியாக காயிதே மில்லத் கல்லூரி மாணவிகள் மட்டுமே நேற்றைய தினம் (ஜனவரி 09, திங்கள்) மாலை நேரத்தில் புத்தகக் காட்சி அரங்கினுள் வலம் வந்தனர். நேரம் ஆக ஆக கூட்டம் கூடும் என எதிர்பார்த்தபடியே காத்திருக்க, மணி எட்டரையைத் தொட்டுவிட்டது. எஸ். ராமகிருஷ்ணன் நேற்றும் வரவில்லை. அதனால் குட்டி ரேவதி அண்ட் கோ-வினரும் வரவில்லை. துரைமுருகன் ஒரு மின்னல் வேக விஸிட் அடித்தார். ஒரு சில தொலைக்காட்சி நடிகர்களைக் காண முடிந்தது. பல ஸ்டால்களில் கொட்டாவி வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டிருந்தது. ஆனால் வந்த சிலரில் பலர் உண்மையான புத்தக ஆர்வலராக புத்தகங்களை நிதானமாகத் தேடி, தேர்ந்தெடுத்து வாங்கிச் சென்றனர். வெளியே புதிதாக 'தக்காளி சூப்' கடை ஒன்று முளைத்திருந்தது. ஒரு காகித தம்ளரில் மூன்று கரண்டி சூப் ஊற்றி, கான்பிளேக்ஸ் தூவி கையில் கொடுத்து பதினைந்து ரூபாய் என்றனர். கடையில் இருந்த மூன்று இளம் பெண்களும் வியாபாரத்துக்கிடைப்பட்ட நொடிகளில் டெல்லி அப்பளம், மிளகாய் பஜ்ஜி என நொறுக்கிக் கொண்டிருந்தனர். (ரொம்ப அவசியம்!) 'அட்சய திருதயை மாதிரி ஏதாவது சமாச்சாரத்தைப் பரப்பிவிட்டால்தான் வார நாட்களிலும் கூட்டம் கூடும்' என நொந்து கொண்டார் கொட்டாவி பார்ட்டி ஒருவர்.

 

திங்கள் என்றால் மந்தம்

பொதுவாக திங்கள்கிழமைகளில் புத்தகக் காட்சிக்கு மக்கள் அதிகம் வரமாட்டார்கள். வாரத்தொடக்கம், அலுவலகத்தில் விடுமுறை எடுக்கமுடியாது என்பது உள்பட இதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஆகவே நேற்றைய தினம் கண்காட்சிக்கு வந்த மக்கள் மிகக் குறைவு. விற்பனையும் மந்தம்தான்.

(இந்திரா புகழ்) அனுஹாஸன், பழ. நெடுமாறன், துரைமுருகன் (மூன்று நாள் லேட்), போன்ற சில பிரபலங்கள் வந்திருந்தார்கள். கண்காட்சிப் பொறுப்பாளர்கள் மற்ற கடைகளைச் சுற்றிப்பார்க்க அவகாசம் கிடைத்தது.

விகடன் ஸ்டாலில் தமிழருவி மணியனின் புத்தகம் மிக நன்றாக விற்பனையாவதாகச் சொன்னார்கள். வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் இன்னமும் வேகம் குறையாமல் விற்கப்படுவதைப் பார்க்க முடிந்தது.

கண்காட்சி அமைப்பாளர்கள் கடனட்டை வசதிக்கு ஆங்காங்கே சில ஏற்பாடுகள் செய்திருப்பதாகச் சொன்னாலும் பெரும்பாலான கடைக்காரர்கள் க்ரெடிட் கார்ட் வேண்டாம் என்றே சொல்கிறார்கள். காரணம் புரியவில்லை. ஆயிரக்கணக்கில் வியாபார சாத்தியம் இருந்தாலும் காசாகக் கொடுத்தால்தான் விற்பனைக்கு முன்வருவோம் என்கிறார்கள். ஏன் தயக்கம் என்பது புரியவில்லை.

கிழக்கு பதிப்பக ஸ்டாலில் அனைத்துவித க்ரெடிட் கார்டுகளும் ஏற்கப்படுகின்றன. இது பல வாசகர்களுக்கு சௌகரியமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.

இம்முறை கேண்டீனில் உணவு ஓரளவு தரமாக இருப்பினும் கை கழுவும் வசதி சுத்தமாக இல்லை. இட நெருக்கடி மிக அதிகம். கழிப்பிடங்கள் மிக மோசமாக இருக்கின்றன. கண்காட்சிக்கு வரும் பெண்கள் படும்பாட்டைப் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது.

எத்தனையோ லட்சங்கள் செலவழித்துக் கண்காட்சி நடத்துபவர்கள் இந்த அற்ப விஷயத்தில் ஏன் இத்தனை அலட்சியம் காட்டுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை.

Sunday, January 08, 2006

 

சென்னை புத்தகக் காட்சி - சில புகைப்பட பதிவுகள்


நுழைவுச் சீட்டு வாங்குமிடம்


சா. கந்தசாமி
கோலங்களுடன் நாகூர் ரூமிகவிக்கோவின் விசிட்


கனடா வெங்கட்


திலகவதி டாக்ஆதவன் சிறுகதைகளுடன் தொகுப்பாளர் வெங்கடேஷ்


 

கிழக்குக்கு வந்த விருந்தினர்கள்

கடந்த இரு தினங்களில் புத்தகக் காட்சியில் கிழக்கு பதிப்பகத்துக்குப் பல முக்கியப் பிரமுகர்கள் வருகை தந்தார்கள்.

எழுத்தாளர்கள் பி.ஏ. கிருஷ்ணன், பிரபஞ்சன், திலகவதி, சா. கந்தசாமி, கவிஞர் அப்துல் ரகுமான், நல்லி குப்புசாமி செட்டியார், ஆனந்த விகடன் இதழின் இணை நிர்வாக இயக்குநர் பா. சீனிவாசன், தினமணி கதிர் ஆசிரியர் சிவகுமார் போன்றவர்கள் கிழக்கு நூல்களை மிகவும் ரசித்து வெகுவாகப் பாராடியவர்களுள் சிலர்.

வலைப்பதிவாளர்கள் சந்திப்பு ஞாயிறு காலை முதல் மதியம் வரை கிழக்கு ஸ்டால் வாசலில் நடைபெற்றது. எல்லே ராம், ஐகாரஸ் பிரகாஷ், ரோசா வஸந்த், மயிலாடுதுறை சிவா, நாராயண், டோண்டு ராகவன், முத்து, என். சொக்கன், நாகூர் ரூமி போன்ற பல நண்பர்கள் சந்தித்து அளவளாவினார்கள்.

ஞாயிறு மாலை வெங்கட் வருகை தந்தார். லேசர் விஞ்ஞானிக்கு எப்படியும் நாற்பதிலிருந்து ஐம்பது வயதுக்குள் இருக்கும் என்றும் ஒரு நடுத்தர வயது ஆளாக இருப்பார் என்றும் கற்பனை செய்து வைத்திருந்த அத்தனை பேருக்கும் இனிய அதிர்ச்சி. இருபத்திரண்டு முதல் இருபத்தைந்து வயதுக்கு மேல் மதிப்பிடவே முடியாத இளமைப் பொலிவுடன் காலேஜ் மாணவர் போல இருக்கிறார் வெங்கட். வெகுநேரம் கூட்டத்தை பிரமிப்புடன் பார்த்தபடி அமர்ந்திருந்தார். இன்னும் ஒருவாரம் இங்கே இருப்பார்.

 

தமிழ் முரசும் நவீன இலக்கியமும்

2006க்கான இலக்கிய உலகப் பரபரப்பை எஸ். ராமகிருஷ்ணன் தோற்றுவித்திருக்கிறார்.

சண்டைக்கோழி திரைப்படத்தில் அவர் எழுதியிருக்கும் ஒரு வசனம் கவிஞர் குட்டி ரேவதியை அவமானப்படுத்துவது போல் இருப்பதாகக் குற்றம் சாட்டி பெண் படைப்பாளிகள் கடந்த இரு தினங்களாகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

உயிர்மை பதிப்பக நூல்கள் வெளியீடு நடந்த அரங்கில் கோஷம் எழுப்பி, தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்த இப்படைப்பாளிகள், நேற்றைய தினம் புத்தகக் காட்சி வளாகத்திலும் வெளியே ஜனநாயக முறையில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள்.

கவிஞர் குட்டி ரேவதிக்கு ஆதரவாகத் திரண்ட படைப்பாளிகள் தமக்குத் தோன்றிய கருத்துகளைத் தெரிவித்ததோ, ராமகிருஷ்ணன் தன் தரப்பு நியாயத்தை வெளிப்படுத்தியதோ இயல்பான விஷயங்களே. ஆனால் இந்த விஷயத்தை தமிழ் முரசு நாளிதழ் தனது முதல் பக்கத் தலைப்புச் செய்தியாக்கி, தனக்கே உரிய பிரத்தியேகமான மொழி நடையில் இலக்கிய அக்கப்போர் வளர்க்கப் பார்த்தது, கண்காட்சியில் பெரியதொரு சலசலப்பை ஏற்படுத்தியது.

படைப்பாளிகள் தொடர்பான பிரச்னை ஒன்றை சட்டமன்ற / மாநகராட்சிக் கூட்டக் கலவரம் போல மிகைப்படுத்தி வெட்டுவேன், கொல்வேன் என்றெல்லாம் கூறியதாகப் பரபரப்பு அம்சங்களை இணைத்து முதல் பக்கத்தில் அந்த நாளிதழ் வெளியிட்டுவிட, கண்காட்சி வளாகமே ஒரு கலவர பூமியாகிவிட்டது போன்ற தோற்றம் அவசியம் மக்களுக்கு எழுந்திருக்கும்.

இதன் விளைவாக, ஞாயிற்றுக்கிழமை மாலை ஆனந்த விகடன் ஸ்டாலுக்கு வருகை தரவிருந்த எஸ். ராமகிருஷ்ணன் வரவில்லை. அவர் வருவார் என்று வாசலிலேயே எதிர்பார்த்து குட்டி ரேவதியும் பிற ஆதரவாளர்களும் காத்திருந்துவிட்டுத் திரும்பிச் சென்றார்கள்.

தமிழ் முரசு, செய்திகளை அளிப்பதில் இதற்கு முன் யாரும் கையாளாத சில உத்திகளை மேற்கொள்கிறது. அதன் திருகலான மொழியும் வெளிப்பாட்டு முறையும் புகைப்படங்களும், செய்திகளை 'உருவாக்கும்' திறனும் சற்றே கலவரமூட்டுபவையாக இருக்கின்றன. பத்திரிகைக்கு நிச்சயம் நல்ல விளம்பரம் கிடைக்கும். ஆனால் எத்தனை நாள் நிலைக்கும் என்று சொல்லத் தெரியவில்லை.

பி.கு: நவீன இலக்கியவாதிகளை வெகுஜன ஊடகங்கள் பொருட்படுத்துவதில்லை என்கிற வசையைத் தமிழ் முரசு ஒழித்திருக்கிறது. இதில் சந்தேகமில்லை. முதல் பக்க முதல் செய்தியே இதுதான். தொடர்ச்சி மூன்றாம் பக்கமும் உண்டு. ஆனால் இப்படியொரு விஷயத்தை முன்வைத்து நவீன இலக்கியவாதிகளை வெகுஜன வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்க வேண்டாம்.

 

ஞாயிறு போற்றுதும்

சென்னை மக்களின் வாங்கும் சக்தி குறித்து யாருக்கேனும் சந்தேகம் இருந்திருந்தால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) புத்தகக் கண்காட்சியில் தீர்ந்திருக்கும். தனக்கு இது தேவை என்று பட்டுவிட்டால் என்ன விலை கொடுத்தும் புத்தகம் வாங்க யாருமே தயங்குவதில்லை என்பது நேற்று நிரூபிக்கப்பட்டது. பல பதிப்பகங்கள் இந்த ஒரு நாளில் லட்சம் என்கிற இலக்கை மிகச் சுலபமாகக் கடந்தன.

இலக்கியம், சினிமா, அரசியல், வாழ்க்கை, வாழ்வியல் நூல்கள் அதிகம் விற்பனை ஆயின. இம்முறை கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த புத்தகங்கள் அதிகம் வரவில்லை என்று சில வாசகர்கள் பேசிக்கொண்டு சென்றதைக் கேட்க முடிந்தது.

உயிர்மை வெளியீடாக வந்திருக்கும் சுஜாதாவின் நாடகங்கள் முழுத்தொகுப்பு நூல் நன்றாக இருப்பதாகப் பலரும் சொன்னார்கள். நிறைய பேர் வாங்கியும் சென்றார்கள். ஆனால் வாங்கிய அத்தனை பேரும் 500 ரூபாய் விலையை மிகப்பெரிய குறையாகப் பேசிச் சென்றார்கள். (அதே பக்க அளவு, தயாரிப்புத் தரமுள்ள வேறு பல நூல்கள் கண்காட்சி வளாகத்திலேயே 350 ரூபாய் விலைக்கு இருக்கின்றன.)

அலைகள் வெளியீட்டகம் சென்ற ஆண்டு ரிக் வேதத்தின் தமிழ் மொழியாக்கத்தை மூன்று பெரும் பாகங்களாகக் கொண்டுவந்திருந்தது. இம்முறை யஜுர் மற்றும் சாம வேதங்களின் தமிழாக்கங்கள் மிக நேர்த்தியான அச்சுத்தரத்தில் வந்திருக்கின்றன. மிக விரைவில் அதர்வ வேதமும் வெளியாகும் என்று சொன்னார்கள்.

காவல் துறை அதிகாரியும், இவ்வாண்டு சாகித்ய அகடமி விருது பெற்றவருமான திலகவதி ஒரு பதிப்பகம் தொடங்கி சில பிரும்மாண்டமான நூல்களை வெளியிட்டிருக்கிறார். 90களுக்குப் பிறகான தமிழிலக்கிய வளர்ச்சியைக் காட்சிப்படுத்தும் மிகப்பெரிய தொகுப்பு நூல் ஒன்று இவரது பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டிருக்கிறது. இன்னொரு பக்கம் சே குவேராவை சுண்டு விரல் சைஸ் புத்தகம் ஒன்றுக்குள் அடக்கியிருக்கிறார்கள். இரண்டுமே பார்க்க அழகாக இருக்கின்றன.

இம்முறை கண்காட்சியில் வெளிப்படையாகத் தெரிந்த ஓரம்சம், டிக்ஷனரிகளுக்கான தேவையும் பூர்த்தியாகாத எதிர்பார்ப்புகளும். அநேகமாகப் பெரும்பாலான சீனியர் பதிப்பகங்கள் ஆளுக்கொரு அகராதி தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள். ஐம்பது ரூபாய் முதல் இருநூறு ரூபாய் வரை பக்கங்களுக்கேற்ற விலை. இந்த அகராதிகளையெல்லாம் யாராவது ஓர் ஓய்வுபெற்ற ஆங்கிலப் பேராசிரியரைக் கொண்டு தயாரித்துவிடுகிறார்கள் போலிருக்கிறது. எந்த அடிப்படையில் இவை தயாரிக்கப்படுகின்றன என்பது விளங்கவில்லை. எதுவும் முழுமையானதாக இல்லை. ஆனால் இவற்றையும் மக்கள் வாங்கிச் செல்கிறார்கள்.

ஒரு தலைசிறந்த ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ் அகராதிக்கான தேவை புரிகிறது. ஆனால் அகராதி தயாரிப்பு என்பது சாதாரண விஷயமில்லை என்பது பலருக்குப் புரிவதில்லை. பழைய அகராதிகளைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் சொற்களை நீக்கிவிட்டுப் புதிய பதிப்பாக வெளியிடப்படும் இத்தகைய இன்ஸ்டண்ட் அகராதிகள் சற்றே கவலை தருகின்றன.

ஒரு நல்ல அகராதியை உருவாக்கும் எண்ணத்தைக் கிழக்கு பதிப்பகத்துக்கு இக்கண்காட்சி ஏற்படுத்தியிருக்கிறது. சில ஆண்டுகளில் இது கைகூடலாம்.

Friday, January 06, 2006

 

தொடங்கியது கண்காட்சி

சென்னை புத்தகக் கண்காட்சி இன்று தொடங்கியது. தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் காளிமுத்து வாழ்த்துரை வழங்கி மாலை ஆறு மணி அளவில் ஆரம்பித்து வைத்ததாக தினசரிகள் சொல்லுமென்றாலும் பிற்பகல் மூன்று மணியில் இருந்தே மக்கள் வர ஆரம்பித்துவிட, விற்பனையும் அப்போதே தொடங்கிவிட்டது.

சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள், அகலமான நடைபாதைகள், திருப்திதரத்தக்க ஒளி அமைப்புகள், ஓரளவு தரமான உணவு (இம்முறை சங்கீதா) என்று இந்த ஆண்டுக்கான பரிணாம வளர்ச்சியைக் கண்காட்சி பெற்றிருக்கிறது.

இருநூற்றைம்பதுக்கும் மேற்பட்ட புத்தகக் கடைகள். நிறைய பதிப்பாளர்கள், ஓரளவு விற்பனையாளர்கள், அங்கே கொஞ்சம் சாஃப்ட்வேர் கடைகள், இங்கே சில காப்பிக் கடைகள்.

முதல்நாள் கண்ணில் பட்ட நூல்களுள் குறிப்பிடத்தகுந்த சில: வடுவூர் துரைசாமி ஐயங்காரின் பல நாவல்கள் அல்லயன்ஸில் மறுபிரசுரம் கண்டிருக்கின்றன. ஐ.எஃப்.டியில் நூறு ரூபாய்க்கு அற்புதமான தயாரிப்பில் குர் ஆன் தர்ஜுமா வந்திருக்கிறது. தமிழினி வெளியிட்டிருக்கும் ஜெயமோகனின் 'கொற்றவை' என்கிற காப்பிய நூல், தயாரிப்பு நேர்த்தியில் புதிய சிகரங்களைத் தொட்டிருக்கிறது. கவிதா பப்ளிகேஷன்ஸில் ஜெயகாந்தனின் அனைத்து நாவல்களும் அடங்கிய பெருந்தொகுதிகள் வந்திருப்பதாக சேது. சொக்கலிங்கம் சொன்னார். ரூ. 500க்கு எந்தப் புத்தகம் வாங்கினாலும் பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் இலவசம் என்று கௌரா ஏஜென்சீஸ் ராஜசேகர் அறிவித்திருக்கிறார். (அவர்கள் வெளியிட்ட பொ.செ. நாற்பதாயிரம் பிரதிகள் விற்றுவிட்டனவாம். இதுவரை கிடைத்த லாபம் போதும், இனி வாசிக்க விரும்புகிறவர்களுக்கு இலவசமாகத்தான் தரப்போகிறோம் என்று சொன்னார்.) தி.வை.கோபாலய்யரின் தமிழிலக்கணப் பேரகராதி மறு அச்சாக வந்திருக்கிறது.

ஆங்கிலப் புத்தகங்களில் கூகிள் ஸ்டோரி மற்றும் மித்ரோகின் ஆர்கைவ் ஆகியவை பரவலாக நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதைக் காணமுடிந்தது.

கிழக்கு ஸ்டாலில் கண்ணீரும் புன்னகையும், நிலமெல்லாம் ரத்தம், ஆதவன் கதைகள், எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் போன்ற நூல்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. என். சொக்கனின் 'ஹமாஸ்: பயங்கரத்தின் முகவரி' புத்தகத்தைக் கேட்டுக்கேட்டு வாங்கிச் சென்றார்கள்.

சென்னை வலைப்பதிவு நண்பர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பி.கே.சிவகுமாரின் புத்தகம் (எனி இந்தியன் வெளியீடு) இன்று வருமென்று எதிர்பார்த்து, வரவில்லை. நாளை வந்துவிடும் என்று விருட்சம் அரங்கில் எனி இந்தியன் சார்பில் அமர்ந்திருந்த ஹரன் பிரசன்னா தெரிவித்தார்.

இந்த வருட நூல்களில் சட்டென்று கண்ணில் பட்ட பெரிய மாறுதல் : பெரும்பாலான பதிப்பாளர்கள் க்ரவுன் சைஸிலிருந்து விடுபட்டு டெமிக்கு மாறியிருப்பது. சில ஜோதிட, வாஸ்து, பட்சி சாஸ்திரப் புத்தகங்கள் கூட டெமியில் தென்பட்டது சற்றே வியப்பாக இருந்தது.

இந்த வருட ஆச்சர்யம்: கவிதை நூல்கள் குறைவாக இருக்கின்றன.

பொதுவாக முதல்நாளன்று நிறைய வி.ஐ.பிகள் வருவது வழக்கம். இம்முறை காளிமுத்து திறந்துவைத்ததாலோ என்னவோ, எப்போதும் முதல் நாள் வரும் துரைமுருகன் வரவில்லை. கனிமொழி - அரவிந்தன் தம்பதியைப் பார்க்க முடிந்தது. எழுத்தாளர்களில் பிரபஞ்சன், பிரேம் - ரமேஷ், மாலதி மைத்ரி, விக்கிரமாதித்யன் ஆகியோர் வந்திருந்தார்கள். பல திரைப்பட உதவி இயக்குநர்கள் வந்தார்கள். வசன கர்த்தா வேதம் புதிது கண்ணன் வந்திருந்தார்.

தமிழ் இணைய எழுத்தாளர்கள் அபுல் கலாம் ஆசாத், லாஸ் ஏஞ்சல்ஸ் ராம், ரோசா வசந்த், (உருப்படாதது) நாராயண், மயிலாடுதுறை சிவா, எழில் ஆகியோர் வந்தார்கள். வெளிநாடுவாழ் வலைப்பதிவர்கள் பலர் வந்திருப்பதால் நாளை காலை 11 மணி அளவில் கண்காட்சியரங்கில் அனைவரும் மொத்தமாகச் சந்திக்கலாம் என்று ஏற்பாடாகியிருக்கிறது.

இன்று வந்த கூட்டத்தைக் கூட்டம் என்று சொல்லமுடியாது. சென்னை புத்தகக் கண்காட்சியின் நிஜமான கூட்டம் என்பது நாளையும் நாளை மறுநாளும் வரப்போவதுதான்.

Tuesday, January 03, 2006

 

கிழக்கு - புதிய நூல்கள்

கடந்த ஆண்டு கிழக்கு பதிப்பகம் ஐம்பது புத்தகங்களுடன் சென்னை புத்தகக் கண்காட்சியில் பங்குபெற்றது. இவ்வாண்டு மேலும் ஐம்பத்திமூன்று நூல்களுடன் கண்காட்சியில் பங்குபெறுகிறது.

இவற்றுள் புத்தகக் கண்காட்சியை ஒட்டி வெளியிடப்படவிருக்கும் நூல்களின் விவரம் வருமாறு:

1. நிலமெல்லாம் ரத்தம் (இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்னையின் வரலாறு)
2. அல் காயிதா - பயங்கரத்தின் முகவரி
3. ஹமாஸ்- பயங்கரத்தின் முகவரி
4. கண்ணீரும் புன்னகையும் (சந்திரபாபுவின் வாழ்க்கை)
5. ஹாலிவுட் அழைக்கிறது.
6. அயோத்தி: நேற்றுவரை
7. ஆப்கனிஸ்தான்: அழிவிலிருந்து வாழ்வுக்கு
8. ஜப்பான்: ஒரு ஃபீனிக்ஸின் கதை
9. மார்க்கெட்டிங் மாயாஜாலம்
10. ஆதவன் சிறுகதைகள்
11. புத்தம் சரணம் (புத்தரின் வாழ்க்கை)
12. 18வது அட்சக்கோடு (அசோகமித்திரனின் நாவல் - செம்பதிப்பு)
13. ஓப்பன் டிக்கெட்
14. மார்க்ஸ் எனும் மனிதர் (என். ராமகிருஷ்ணனின் புகழ்பெற்ற நூலின் மறுபதிப்பு)

இந்நூல்கள் குறித்த மேலதிக விவரங்களை இங்கே பெறலாம். கிழக்கு இவ்வாண்டு வெளியிட்டுள்ள 53 நூல்களின் பட்டியலையும் பெற மின்னஞ்சல் செய்யவும்.

 

வெளிவரும் முக்கிய நூல்கள்

இந்த வருடம் கண்காட்சிக்கு வரும் முக்கியப் புத்தகங்கள்:
1. மகாத்மா காந்தி நூல் வரிசை (வர்த்தமானன் பதிப்பகம்)
2. கொற்றவை (ஜெயமோகனின் காப்பியம், தமிழினி)
3. ஆதவன் சிறுகதைகள் (முழுத்தொகுதி, கிழக்கு பதிப்பகம்)
4. கண்ணீரும் புன்னகையும் (சந்திரபாபுவின் வாழ்க்கை , கிழக்கு பதிப்பகம்)
5. சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம் (சுஜாதா, உயிர்மை பதிப்பகம்)
6. உறுபசி (எஸ். ராமகிருஷ்ணன், உயிர்மை பதிப்பகம்)
7. கதாவிலாசம் (எஸ். ராமகிருஷ்ணன், விகடன் பிரசுரம்)

இப்பட்டியல் முழுமையற்றது. நாளை அல்லது நாளை மறுநாள் விரிவான பட்டியல் வழங்குகிறோம்.

 

வரைபடம்

காயிதே மில்லத் மகளிர் கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ள புத்தகக் காட்சியின் பாதை வரைபடம். இடப்புறமும் வலப்புறமும் இரு வாயில்கள் உண்டு. இரண்டு பக்கமும் டிக்கெட் கவுண்ட்டர்கள் இருக்கின்றன. இடப்புற வாயிலில் நுழைந்து இடது புறம் திரும்பினால் உணவுச் சாலை வரும்.

 

புத்தகக் காட்சி ஆரம்பம்


29வது சென்னை புத்தகக் காட்சி, வருகிற ஜனவரி 6, 2006 வெள்ளிக்கிழமை அன்று சென்னை காயிதே மில்லத் மகளிர் கலைக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகிறது.

மொத்தமாக 250 பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் பங்குபெறும் இக்கண்காட்சிக்கு இவ்வாண்டு ஐந்து லட்சம் பார்வையாளர்களை எதிர்பார்க்கிறார்கள். சென்னை புத்தகக் கண்காட்சியை ஆண்டுதோறும் நடத்திவரும் தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு (BAPASI) இவ்வாண்டு இப்பெரும் மக்கள் கூட்டத்தை எதிர்கொள்ள விரிவான ஏற்பாடுகளைச் செய்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

கடைகள் சென்ற ஆண்டைப் போலவேதான் அமைக்கப்பட்டிருக்கின்றன. லே - அவுட்டில் மாறுதல் ஏதுமில்லை. ஆனால் இம்முறை சிங்கிள் ஸ்டால், ஒன்றரை ஸ்டால், இரண்டு ஸ்டால் என்று மூன்று அளவுகளில் கடைகள் விரிக்கப்படுகின்றன.

வாசகர்களின் உணவுத் தேவைக்கென தனியே ஒரு Food court அமைக்கப்பட்டிருக்கிறது. (ஒப்பந்ததாரர் யார் என்று இன்னும் தெரியவில்லை. சென்றமுறை உணவு மிக மோசம்.) ஒவ்வொரு சந்துக்கும் ஒரு காப்பிக்கடை மட்டும் இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

பிட் நோட்டீஸ் கொடுக்கக் கூடாது, வாசகர்களை யாரும் தம் கடைக்கு வரும்படி வெளியே நின்று அழைக்கக்கூடாது, கூட்டம் சேர்க்கக் கூடாது என்று பதிப்பாளர்களுக்கு ஏகப்பட்ட கெடுபிடி விதிமுறைகள் விதித்திருக்கிறார்கள். எல்லாமே நெரிசல் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள்தாம் என்று பபாசி சொல்கிறது.

இந்த ஆண்டு வெளியாகவிருக்கிற முக்கிய நூல்கள் எவை என்று இன்னும் முழுவதுமாக விவரம் தெரியவில்லை. நாளை அநேகமாகத் தெரியவரலாம். வர்த்தமானம் பதிப்பகம் வெளியிடும் மகாத்மா காந்தி நூல் வரிசை இந்தக் கண்காட்சிக்கு வந்துவிடக்கூடும் என்று தெரிகிறது.

இக்கண்காட்சியில் ஆண்டின் சிறந்த பதிப்பகமாக பாரதி பதிப்பகம் பாராட்டப்படுகிறது. சிறந்த எழுத்தாளர் என்று சரித்திர நாவலாசிரியர் விக்கிரமன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது கவிஞர் அ. செல்ல கணபதிக்கும் சிறந்த விற்பனையாளர் விருது, ஹிக்கின் பாதம்ஸ் நிறுவனத்துக்கும், ஆங்கிலத்தில் எழுதும் படைப்பாளிக்கான விருது சுதா மூர்த்திக்கும் வழங்கப்படுகிறது.

பத்து தினங்களும் மாலை வேளைகளில் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், கவியரங்கம் போன்றவை எப்போதும்போல் உண்டு.

ஜனவரி 6 முதல் 16 வரை சென்னையில் வசிக்கும் புத்தக ஆர்வலர்களைக் கண்காட்சிக்கு அன்புடன் வரவேற்கிறது இந்த 'புத்தகக் கண்காட்சி சிறப்பு வலைப்பதிவு.'

This page is powered by Blogger. Isn't yours?