Friday, January 06, 2006

 

தொடங்கியது கண்காட்சி

சென்னை புத்தகக் கண்காட்சி இன்று தொடங்கியது. தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் காளிமுத்து வாழ்த்துரை வழங்கி மாலை ஆறு மணி அளவில் ஆரம்பித்து வைத்ததாக தினசரிகள் சொல்லுமென்றாலும் பிற்பகல் மூன்று மணியில் இருந்தே மக்கள் வர ஆரம்பித்துவிட, விற்பனையும் அப்போதே தொடங்கிவிட்டது.

சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள், அகலமான நடைபாதைகள், திருப்திதரத்தக்க ஒளி அமைப்புகள், ஓரளவு தரமான உணவு (இம்முறை சங்கீதா) என்று இந்த ஆண்டுக்கான பரிணாம வளர்ச்சியைக் கண்காட்சி பெற்றிருக்கிறது.

இருநூற்றைம்பதுக்கும் மேற்பட்ட புத்தகக் கடைகள். நிறைய பதிப்பாளர்கள், ஓரளவு விற்பனையாளர்கள், அங்கே கொஞ்சம் சாஃப்ட்வேர் கடைகள், இங்கே சில காப்பிக் கடைகள்.

முதல்நாள் கண்ணில் பட்ட நூல்களுள் குறிப்பிடத்தகுந்த சில: வடுவூர் துரைசாமி ஐயங்காரின் பல நாவல்கள் அல்லயன்ஸில் மறுபிரசுரம் கண்டிருக்கின்றன. ஐ.எஃப்.டியில் நூறு ரூபாய்க்கு அற்புதமான தயாரிப்பில் குர் ஆன் தர்ஜுமா வந்திருக்கிறது. தமிழினி வெளியிட்டிருக்கும் ஜெயமோகனின் 'கொற்றவை' என்கிற காப்பிய நூல், தயாரிப்பு நேர்த்தியில் புதிய சிகரங்களைத் தொட்டிருக்கிறது. கவிதா பப்ளிகேஷன்ஸில் ஜெயகாந்தனின் அனைத்து நாவல்களும் அடங்கிய பெருந்தொகுதிகள் வந்திருப்பதாக சேது. சொக்கலிங்கம் சொன்னார். ரூ. 500க்கு எந்தப் புத்தகம் வாங்கினாலும் பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் இலவசம் என்று கௌரா ஏஜென்சீஸ் ராஜசேகர் அறிவித்திருக்கிறார். (அவர்கள் வெளியிட்ட பொ.செ. நாற்பதாயிரம் பிரதிகள் விற்றுவிட்டனவாம். இதுவரை கிடைத்த லாபம் போதும், இனி வாசிக்க விரும்புகிறவர்களுக்கு இலவசமாகத்தான் தரப்போகிறோம் என்று சொன்னார்.) தி.வை.கோபாலய்யரின் தமிழிலக்கணப் பேரகராதி மறு அச்சாக வந்திருக்கிறது.

ஆங்கிலப் புத்தகங்களில் கூகிள் ஸ்டோரி மற்றும் மித்ரோகின் ஆர்கைவ் ஆகியவை பரவலாக நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதைக் காணமுடிந்தது.

கிழக்கு ஸ்டாலில் கண்ணீரும் புன்னகையும், நிலமெல்லாம் ரத்தம், ஆதவன் கதைகள், எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் போன்ற நூல்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. என். சொக்கனின் 'ஹமாஸ்: பயங்கரத்தின் முகவரி' புத்தகத்தைக் கேட்டுக்கேட்டு வாங்கிச் சென்றார்கள்.

சென்னை வலைப்பதிவு நண்பர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பி.கே.சிவகுமாரின் புத்தகம் (எனி இந்தியன் வெளியீடு) இன்று வருமென்று எதிர்பார்த்து, வரவில்லை. நாளை வந்துவிடும் என்று விருட்சம் அரங்கில் எனி இந்தியன் சார்பில் அமர்ந்திருந்த ஹரன் பிரசன்னா தெரிவித்தார்.

இந்த வருட நூல்களில் சட்டென்று கண்ணில் பட்ட பெரிய மாறுதல் : பெரும்பாலான பதிப்பாளர்கள் க்ரவுன் சைஸிலிருந்து விடுபட்டு டெமிக்கு மாறியிருப்பது. சில ஜோதிட, வாஸ்து, பட்சி சாஸ்திரப் புத்தகங்கள் கூட டெமியில் தென்பட்டது சற்றே வியப்பாக இருந்தது.

இந்த வருட ஆச்சர்யம்: கவிதை நூல்கள் குறைவாக இருக்கின்றன.

பொதுவாக முதல்நாளன்று நிறைய வி.ஐ.பிகள் வருவது வழக்கம். இம்முறை காளிமுத்து திறந்துவைத்ததாலோ என்னவோ, எப்போதும் முதல் நாள் வரும் துரைமுருகன் வரவில்லை. கனிமொழி - அரவிந்தன் தம்பதியைப் பார்க்க முடிந்தது. எழுத்தாளர்களில் பிரபஞ்சன், பிரேம் - ரமேஷ், மாலதி மைத்ரி, விக்கிரமாதித்யன் ஆகியோர் வந்திருந்தார்கள். பல திரைப்பட உதவி இயக்குநர்கள் வந்தார்கள். வசன கர்த்தா வேதம் புதிது கண்ணன் வந்திருந்தார்.

தமிழ் இணைய எழுத்தாளர்கள் அபுல் கலாம் ஆசாத், லாஸ் ஏஞ்சல்ஸ் ராம், ரோசா வசந்த், (உருப்படாதது) நாராயண், மயிலாடுதுறை சிவா, எழில் ஆகியோர் வந்தார்கள். வெளிநாடுவாழ் வலைப்பதிவர்கள் பலர் வந்திருப்பதால் நாளை காலை 11 மணி அளவில் கண்காட்சியரங்கில் அனைவரும் மொத்தமாகச் சந்திக்கலாம் என்று ஏற்பாடாகியிருக்கிறது.

இன்று வந்த கூட்டத்தைக் கூட்டம் என்று சொல்லமுடியாது. சென்னை புத்தகக் கண்காட்சியின் நிஜமான கூட்டம் என்பது நாளையும் நாளை மறுநாளும் வரப்போவதுதான்.

Comments:
கிழக்கு என்று கேளுங்கள். எட்டுத்திக்கிலிருந்தும் வழி காட்டுவார்கள்.

--
தினமலரில் பார்த்தது; நல்ல மார்க்கெட்டிங் வசனம் :)
 
புதிதாக வெளியிடப்படும் நூல்களை மட்டும் இங்கு பட்டியலிடுங்கள். இங்கு நடக்கும் நூல் வெளியீட்டு விழாக்களைப் பற்றி சுருக்கமான செய்தி வெளியிடுங்கள். மல்டிமீடியா கடைகளும் உள்ளதாக ஒருங்கிணைப்பாளர் சன் டிவி செய்தியில் கூறினார். தமிழில் உள்ள மல்டிமீடியா சிடிகளைப் பற்றி ஒரு பதிவு எழுதுங்கள்.
 
Post a Comment<< Home

This page is powered by Blogger. Isn't yours?