Monday, January 09, 2006

 

திங்கள் என்றால் மந்தம்

பொதுவாக திங்கள்கிழமைகளில் புத்தகக் காட்சிக்கு மக்கள் அதிகம் வரமாட்டார்கள். வாரத்தொடக்கம், அலுவலகத்தில் விடுமுறை எடுக்கமுடியாது என்பது உள்பட இதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஆகவே நேற்றைய தினம் கண்காட்சிக்கு வந்த மக்கள் மிகக் குறைவு. விற்பனையும் மந்தம்தான்.

(இந்திரா புகழ்) அனுஹாஸன், பழ. நெடுமாறன், துரைமுருகன் (மூன்று நாள் லேட்), போன்ற சில பிரபலங்கள் வந்திருந்தார்கள். கண்காட்சிப் பொறுப்பாளர்கள் மற்ற கடைகளைச் சுற்றிப்பார்க்க அவகாசம் கிடைத்தது.

விகடன் ஸ்டாலில் தமிழருவி மணியனின் புத்தகம் மிக நன்றாக விற்பனையாவதாகச் சொன்னார்கள். வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் இன்னமும் வேகம் குறையாமல் விற்கப்படுவதைப் பார்க்க முடிந்தது.

கண்காட்சி அமைப்பாளர்கள் கடனட்டை வசதிக்கு ஆங்காங்கே சில ஏற்பாடுகள் செய்திருப்பதாகச் சொன்னாலும் பெரும்பாலான கடைக்காரர்கள் க்ரெடிட் கார்ட் வேண்டாம் என்றே சொல்கிறார்கள். காரணம் புரியவில்லை. ஆயிரக்கணக்கில் வியாபார சாத்தியம் இருந்தாலும் காசாகக் கொடுத்தால்தான் விற்பனைக்கு முன்வருவோம் என்கிறார்கள். ஏன் தயக்கம் என்பது புரியவில்லை.

கிழக்கு பதிப்பக ஸ்டாலில் அனைத்துவித க்ரெடிட் கார்டுகளும் ஏற்கப்படுகின்றன. இது பல வாசகர்களுக்கு சௌகரியமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.

இம்முறை கேண்டீனில் உணவு ஓரளவு தரமாக இருப்பினும் கை கழுவும் வசதி சுத்தமாக இல்லை. இட நெருக்கடி மிக அதிகம். கழிப்பிடங்கள் மிக மோசமாக இருக்கின்றன. கண்காட்சிக்கு வரும் பெண்கள் படும்பாட்டைப் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது.

எத்தனையோ லட்சங்கள் செலவழித்துக் கண்காட்சி நடத்துபவர்கள் இந்த அற்ப விஷயத்தில் ஏன் இத்தனை அலட்சியம் காட்டுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை.

Comments:
எத்தனையோ லட்சங்கள் செலவழித்துக் கண்காட்சி நடத்துபவர்கள் இந்த அற்ப விஷயத்தில் ஏன் இத்தனை அலட்சியம் காட்டுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை.
>>>
அற்ப விஷயம்?
அதி முக்கியமான விஷயமமுங்க :)

இந்தியாவுக்கேப் பொதுவான நிலைதானே இங்கேயும்?

சண்டக்கோழி சண்டையை உருப்படியான இந்த விஷயத்துக்காக சண்டை போட்டிருக்கலாம். அதை தமிழ் முரசு முதல் பக்கத்தில் போட்டு கொஞ்சம் விழிப்புணர்வாவது வந்திருக்கும் :)
 
செவ்வாய் என்றால்?! :-)
 
Post a Comment



<< Home

This page is powered by Blogger. Isn't yours?